வனங்களின் அரண்கள்
இப்புவியானது சுமார் மூன்றில் ஒரு பங்கு நிலத்தால் சூழப்பட்டுள்ளது இந்த நிலப்பரப்பில் சுமார் 31% காடுகள் பரவி காணப்படுகின்றன. இக்காடுகளை மனிதர்களின் வாழ்வை அவர்களின் பரிணாமத்தை நிலைத்திருக்க செய்கின்றன. இத்தகைய காடுகளின் உள்ளடக்கமாக பல்வேறு வகையான தாவரங்கள் விலங்குகள் பறவைகள் நுண்ணுயிர்கள் வாழ்வை நகர்த்துகின்றன. இவை அனைத்தும் இணைந்தே தான் கானகத்தை காக்கும் காவலர்களாக திகழ்கின்றனர். இருப்பினும் இவர்களில் இன்றியமையாத இடத்தை பெற்று இருப்பது பலம் வாய்ந்த யானைகள் ஆகும். தமிழின் சங்க இலக்கிய நூலான அகநானூறில் கூட
" காட்டு காவலன் யானை காட்டுக்கு உறுப்பின் உயர்வு உடையனான் "எனக் யானையை காற்றின் காவலன் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு காட்டின் நிலையை அதன் தன்மையை இந்த யானைகளை நன்கு அறிந்து வைத்துள்ளன.
பழந்தமிழர் இடத்தில் யானைகள்
சங்க இலக்கியங்கள் யானைகளை பற்றி மதக்கரி, வேழம், களிறு என பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். திருக்குறள், கலித்தொகை 400 போன்ற நூல்களில் முக்கியத்துவம் பெற்ற விலங்காக யானைகள் திகழ்கின்றன .பெரும்பாலான அரசர்களின் பெருமையைப் புகழ்ந்திட யானைகளையே உவமையாக பயன்படுத்தியுள்ளனர். யானைகளைப் புலவர்கள் போராளிகள் என்றும் ,அதன் தந்தம்,துதிக்கை போன்றவற்றை அழகுக்காகவும் கம்பீரத் தன்மைக்காகவும் ஊவமிக்கின்றனர் .மேலும் யானைகள் அறிவுகூர்ந்த கூர்ந்தவைகளாகவும், அரசனுக்கும் யானைகளுக்கும் இடையே நல்லதொரு தொடர்பு இருந்ததாக பல்வேறு சங்க இலக்கிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்காலத்திய நவீன எழுத்தாளர்களும் கூட யானைகளை மையப்படுத்தி பல நூல்களை எழுதியுள்ளனர். ஜெயமோகனின் யானை டாக்டர், பத்து வருட கால ஆராய்ச்சிக்குப்பின் உருவான இராமன் சுகுமாரின் " என்றென்றும் யானை" போன்ற நூல்கள் தற்காலத்திலும் மக்களுக்கு யானை மீது கொண்டிருக்கும் ஈர்ப்பை எடுத்துரைக்கிறது.
பாதிக்கும் காரணிகள்
தென்னிந்தியா தொடங்கி,ஆசியா ஆப்பிரிக்கா கண்டங்கள் முழுமைக்கும் யானைகள் மீதான தாக்கமும், ஈர்ப்பும் குறைந்தபாடில்லை. தென்னிந்தியாவை பொருத்தமட்டில் முற்காலத்தில் யானைகள் வேட்டை செவ்வி கவுண்டரிடத்தில் இருந்தே முதன்முறையாகத் துவங்கியது. அவரைத் தொடர்ந்து வீரப்பனின் யானை வேட்டை , யானைகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.யானைகள் அவற்றின் தந்தங்களுக்காகவே பெரிதும் வேட்டையாடப்பட்டன. உயிருடன் உள்ள யானைகளிடமிருந்து தந்தங்களை பறிப்பது என்பது நடக்காத காரியம் என்பதால் பெருமளவில் யானைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இதனால் காட்டின் தன்மை முற்றிலும் மாற்றப்படுகிறது.யானைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறது. பெரும்பாலும் யானைகள் குடும்பமாகவும் கூட்டமாகவும் வாழும் தன்மையுடையது இவ்வாறாக வேட்டை நிகழ்த்துவதால் அச்சத்தில் வழி தவறி பல யானைகள் தனித்து ஊருக்குள் புகுகிறது. இதனால் மக்களிடத்திலும் அச்சம் ஏற்படுகிறது. காடுகளின் பாதுகாவலரான யானைகள், காடுகளின் தட்பவெப்ப நிலை அறிந்து , வறட்சி காலங்களில் இடமாற்றம் செய்வதன் மூலம் மற்ற விலங்குகள் யானைகளின் இடமாற்றத்தை அறிந்து வறண்ட காலத்தை எதிர்கொள்ள தயாராகிறது. தற்போது இந்த யானைகளின் இல்லாமையினால் காடுகளில் பல்வேறு சூழ்நிலை மாற்றங்கள் நிகழ்கின்றன பல்வேறு விலங்குகள் வறட்சியினால் உயிரிழந்து விடுகின்றன.
சமீபகாலமாக யானைகளின் உயிரிழப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த யானைகள் எண்ணிக்கை 1160 என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மின்சாரம் தாக்கி 93 யானைகள் உயிரிழந்துள்ளன .1991 ஆம் ஆண்டு யானை பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்பட்ட பின் யானைகள் வேட்டையாடுவது அதிகப்படியாக தடுக்கப்பட்டுள்ளது எனினும் அதனை விட சவாலான விஷயமாக தற்போது மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது .இதனால் காட்டு யானைகள் இடையே பாலின விகிதம் பாதிக்கப்படுகிறது .அதன் ஆரோக்கியமான இனப்பெருக்கம் தடைபடுகிறது. இதனால் அழிவுநிலை விலங்குகளாகின்றன.
பாதுகாப்பு முறைகள்
தற்போது யானைகள் வேட்டை பெருமளவில் குறைந்தாலும் ஆங்காங்கே தந்தத்திற்காக யானைகள் வேட்டை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. வனக்காப்பாளர்கள் அவற்றை முறையாக கண்காணித்து முற்றிலுமாக யானை வேட்டையை தடை செய்ய வேண்டும்.
கோடை காலங்களில் யானைகள் நீருக்காக ஊருக்குள் வருகின்றன அவற்றுக்கான நீராதாரங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஊருக்குள் வருவதை தடுத்து யானைகள் நலத்தைப் பாதுகாக்கலாம்.
மின்சார வேலி மின்சார கம்பிகள் மூலம் யானைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டிய கட்டாயம் நம்முடையது தனியார் நிலத்தினர் இடையே மின்சார வேலை வைப்பதை தவிர்த்து முள்வேலி போன்றவற்றை வைக்க அரசு அறிவுறுத்த வேண்டும்
யானைகளின் வலசை பாதை மறிக்கப்பட்டு அவற்றில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சுற்றுலா விடுதிகளை ஏற்படுத்தியுள்ளனர் .அதனை தடுத்து யானைகளுக்கான முறையான வாழ்விடத்தை, அதற்கான சூழலை ஏற்படுத்துதல் அவசியமான ஒன்றாகிறது.
யானைகள் பயிர்களை தேடி வருவது இயல்பு. அதனை தடுக்க இயலாது. எனவே வனமொட்டிய வயல் பரப்பில் வனவிலங்குகள் விரும்பாத பணப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் விவசாய நிலங்களில் யானைகள் புகுவதைத் தடுக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது .அன்றைய தினத்தில் யானைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை கடைநிலை மக்கள் வரையிலும் ஏற்படுத்துதல் மிகவும் அத்தியாவசியமாகிறது
தற்போது பல திரைப்படங்களில் யானைகளின் வாழ்வியலை பற்றி பேசுகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான த எலிபன்ட் விஸ்பரர் எனும் தமிழ் குறும்படம் சிறந்த ஆவண குறும்படம் எனும் தலைப்பில் அகாடமி விருது பெற்றது. இதனைப் போன்ற தற்போது தமிழில் பல திரைப்படங்கள் யானைகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்றன.
அசாத்திய சக்தியும் அபரிதமான அறிவாற்றலும் கொண்ட யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. காட்டின் அரண்களாக விளங்கும் யானைகளை பாதுகாப்பதன் மூலம் நம் நாட்டின் காட்டு வளம் காக்க இயலும்.மனித வளமும் இயற்கையோடு இணைந்து வாழ வழிவகுக்கும். எனவே வனமகன்களைப் பாதுகாப்போம்!வளமுடன் வாழ்வோம்!
அன்புடன்,
அனலி.


கருத்துகள்
கருத்துரையிடுக