தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க பல இலக்கிய அமைப்புகளும், நூல்களும் தமிழில் காணப்பட்டாலும் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மைத்துவம் பெற்றக் காப்பியமான சிலப்பதிகாரம் பற்றி நம்மில் பலர் அறிந்துள்ளோம். சிலப்பதிகாரம் பற்றிய அறிந்த நாம் அது உண்மையா ?பொய்யா? என்று நினைத்ததில்லை. அது கற்பனைக் கதையா? வரலாற்று நிகழ்வா? என்ற சந்தேகம் கொண்டு யாரும் கேட்டதில்லை. கண்ணகி மதுரையை விட்டு சேரநாடு சென்றாள் என்று படித்தறிந்த நாம் அவள் எங்கே சென்றாள் என்பதைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுந்ததில்லை .இது எல்லாவற்றையும் விட சேர மன்னன் கோயில் கட்டினான் என்பதைக் குறிப்பு வைத்து படித்த நமக்கு அந்தக் கோயில் எங்கே அமைந்துள்ளது என்றும் தேடும் எண்ணம் ஏன் வரவில்லை? ஒருவேளை உண்மையிலேயே கோயில் இருக்கிறதா இல்லை வெறும் கட்டுக்கதையா ? என்ற இன்றைய பல கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது .
வரலாற்று நிகழ்வு
ராமாயணமும் மகாபாரதம் போன்ற புராண இதிகாசம் வரலாறுகளை பற்றி பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சாயல் கொண்டு பேசும் தமிழ் சமூகம், குடிமக்களின் அடிப்படை வாழ்வியல் நீதி உணர்த்தும் சிலப்பதிகாரத்தின் பத்தினி தெய்வ வழிபாட்டை பற்றி அத்தி பூத்தார் போலவே பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சிலப்பதிகாரம் என்னும் ஒற்றை இலக்கியச் சான்று கொண்டு ஐநா சபை வரை தமிழின் பெருமைபேசும் நமக்கு, தனி ஒரு ஆளாக நிலவியல் ஆய்வு செய்து, இது ஒரு கற்பனையோ அல்லது புராண இதிகாசம் போன்றதோ இல்லை என்றும் இது முழுக்க முழுக்க ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் நிரூபித்த
சி .கோவிந்தராசனார் என்பவரை பற்றி அறிந்தவர் நம்மில் ஒரு சிலரே.. இவர் தான் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த கோவிலை கண்டறிந்தவர் .தஞ்சாவூரில் கரந்தை தமிழ் சங்கத்தில் உள்ள கரந்தை தமிழ் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர். இவருடன் பயின்ற சக நண்பர்கள் பலர் புத்தரின் அடிச்சுவட்டை தேடி ஆராய்ச்சியில் ஈடுபடுகையில் சிலப்பதிகாரத்தின் மீது தீரா பற்று கொண்ட சி.கோவிந்தராசனார் கண்ணகி அடிச்சுவட்டை அடிப்படையாக வைத்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பயணம் செய்து கண்ணகி கோவிலை கண்டறிந்தார். இவரால் 1945 இல்தொடங்கப்பட்ட இந்த ஆய்வு 1963ல் தான் முடிவடைந்தது.
தற்போது இருக்கும் போக்குவரத்து வசதியோ பயண வசதியோ தொழில்நுட்ப வசதியோ 1945ல் காலகட்டத்தில் கிடையாதுஇருப்பினும் இவர் தனது ஆய்வை நான்கு பிரிவாக பிரித்து ஆய்வு செய்து வெற்றியும் கண்டுள்ளார்
ஆய்வு வகை
1.) காவிரிப்பூம்பட்டினம் அல்லது பூம்புகார்
2.) திருவரங்கம், உறையூர் வரையிலான ஆய்வு
3.) விராலிமலை கொடும்பாளூர் அழகர் மலை வரையிலான கல்வெட்டு மற்றும் ஆராய்ச்சி
4.) மதுரை முழுமைக்குமான ஆய்வு
1.) பூம்புகார் ஆய்வு - கடலடி ஆய்வு
முதலாவதாக மயிலாடுதுறையில் இருந்து தனது சொந்த செலவில் வாடகை மிதிவண்டியில் பயணம் செய்து பல கடலோர பகுதிகளுக்கு சென்று மீனவ சமுதாயம் இருக்கின்ற இடத்தில் சென்று கடல் அடி ஆய்வு மேற்கொண்டதில் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பல கட்டுமான பொருட்கள் செங்கற்கள் போன்ற பல பொருட்களை கடலின் அடியில் இருந்து கண்டெடுத்தார் மேலும் அதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது சிலப்பதிகார காலத்துக்கு ஒத்ததாகவே அறிவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். இதனையடுத்து இரண்டாம் கட்ட ஆய்வாக திருச்சி, உறையூர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கண்ணகி பயணித்த காவிரி நதிக்கரையின் ஓரத்திலே சிலப்பதிகாரத் துணை கொண்டு பயணம் செய்கிறார்.
மூன்றாம் கட்ட அகழாய்வாக விராலிமலை கொடும்பாளூர், அழகர் மலை போன்ற பல இடங்களை சிலப்பதிகார குறிப்பின் அடிப்படையில் இந்த பகுதிகளை கடந்து வருவதற்கே இவருக்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது என்பதனை தனது நூலில் குறித்ததை வைத்து அறிய முடிகிறது. அதைத்தொடர்ந்து மதுரையின்" கீழவாசல் "என்று அழைக்கப்படக்கூடிய கீழ வாயில் என்ற இடத்தின் மூலமாக மதுரைக்குள் நுழைந்து நான்காம் கட்ட ஆய்வாக மதுரையை முழுமையான ஆய்விடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அங்கு சிம்மக்கல் முதல் திருப்பரங்குன்றம் வழியே ஒரு இடுகாட்டின் பெயர் "கோவலன் திடல்" என்று இருப்பதை கண்டறிகிறார் .அது கோவலன் கொலைக்களப்பட்ட இடமாக இருக்கின்றது என்பதனை சிலப்பதிகார நூலின் மூலம் அறிந்து, அதோடு மட்டுமல்லாமல் கோவலனும் கண்ணகியும் இந்த கீழ வாயில் மூலமாக தான் மதுரைக்குள் வருகிறார்கள் என்ற தகவலையும் அறிகிறார் .இதனை கண்ணகி வழித்தடத்தில் கிடைத்த மூன்றாவது தடயமாக குறிப்பிடுகிறார் .அடுத்த குறிப்பாக மதுரையிலிருந்து கோபத்துடன் வெளியேறிய கண்ணகி மேற்கு வாசல் வழியாக நெடுவேல் குன்றம் மலை மேல் ஏறி வேங்கை மலை சோலையில் தெய்வமானாள் என்று தகவலை கேட்ட கண்ணகியின் செவிலித் தாயான தேவந்தியும் அவளது பணி பெண்ணும் கண்ணகி தெய்வமான இடம் நோக்கி பயணம் செய்வதற்கு பயன்படுத்திய வழியைக் கோவிந்தராசனார் சிலப்பதிகார குறிப்புகளின் வழி அறிந்து, அவரும் வைகை ஆற்றின மேற்கு திசையிலேயே நடந்து பல காடு மலைகளைத் தாண்டி மதுரையில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள சுருளி மலை என்ற இடத்தை அடைந்து அங்கு ஆய்வு நடத்துகையில் ஒரு கல்வெட்டை கண்டடைகிறார் அது 14ஆம் நூற்றாண்டு எழுதிய கல்வெட்டு.
அக்கல்வெட்டில் சேர மன்னன் மங்களதேவியினுடைய கோயில் பணிகளுக்காக நிலதானம் வழங்கினார் என்பதற்கான கல்வெட்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மங்களதேவியும் கண்ணகியும் ஒன்று என்பதை ஏற்கனவே சிலம்பில், மாதரியிடம் கவுந்தியடிகள் மங்கல மடந்தை என்று கூறிய குறிப்புகளை பயன்படுத்தி இதுதான் கண்ணகி சென்ற நெடுவேல் குன்றம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் சி கோவிந்தராஜன். பழனி மலைக்கும் சுருளி மலைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் தான் கண்ணகி கோயில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியவர் எந்த போக்கு வரத்து வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில் வேடர்களுடனும் பழங்குடியின மக்களுடனும் கண்ணகி கோயில் தேடி அலைகின்றார். அவ்வாறு செல்கையில் இரண்டு தூண்கள் நுழைவு வாயிலாக வைத்திருந்த (யானைகள் நுழையாத அளவில்) 10 அடி வரைக்கும் கோரை புற்கள் சூழ்ந்த அந்த இடத்தில் எங்கே இருக்கின்றது என்று தேடுகையில் அருகில் இருந்த வேடர் ஒருவர் எல்லோரும் ஒன்றுபோல கூச்சலிடுங்கள் ,எங்கு சத்தம் எதிரொலிக்கிறதோ அதுதான் வேங்கைக்காணல் , கண்ணகிக் கோட்டம் என்று சொல்கையில் வேங்கைகானல், கண்ணகி கூட்டம் என்ற வார்த்தைகள் சிலப்பதிகாரத்திலிருந்து புழக்கத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகள் என்பதனை அறிந்த சி கோவிந்தராசனார், இவ்வார்த்தைகள் தமிழறிஞர்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கையில் இவ்வேடர்களால் எவ்வாறு பயன்படுத்த இயலும் என்பதனை ஐயமாக வெளிப்படுத்திய போது அவர்கள் எங்கள் மூதாதையர்கள் இதனை இவ்வாறு தான் அழைப்பார்கள் என்று கூறியதுடன் தனது ஐயத்தை தெளிவுபடுத்தும் விதமாக வேடர்கள் கூறியதை கேட்டு சி. கோவிந்தராசனார் அதுதான் உண்மையில் வேங்கைகாணலாக இருக்கக்கூடும் என்ற மன உறுதியுடன் அங்கே வைக்கப்பட்டு இருந்த சிலையை உற்று நோக்கினார்.
சிலையை கண்ட கோவிந்தராஜன் அது ஒரு பெண் சிலை ,தலைவிரி கோலமாக ,கிரீடம் அற்ற ,ஒரு மார்பகம் சிறிதாக காணப்படக்கூடிய, அர்த்த சமணத்தில், (தவ நிலையில் ) அமர்ந்து உள்ள சிலையை காண்கிறார். இருப்பினும் இச்சிலை இமய மலையில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதனை அறிந்து கொள்வதற்காக அச்சிலையின் சில பகுதிகளை கனிமவியல் துறைக்கு கார்பன் ரேட்டிங் முறை செய்து சுற்றி இருக்கும் மலைகளோடு ஒப்பீடு செய்து, சுற்றியுள்ள மலைகளைக் காட்டிலும் அச்சிலை செய்யப்பட்ட கற்கள் இமயமலையில் இருந்து கொண்டு வர வேண்டும் என்பதற்காக மென்மையான கல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுற்றி இருக்கும் கற்களை விட அக்கற்கள் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது என்பதனை உறுதி செய்கிறார். இவ்வாறாக சி. கோவிந்தராசனார் சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகியின் கோயிலையும் சிலையையும் கண்டறிந்து அச்சிலையை தனது வீட்டில் பத்திரப்படுத்தி உள்ளார் .
1963ல் கோயம்புத்தூரில் நன்னெறிக்கழகம் என்ற அமைப்பு சி.கோவிந்தராஜன் அவருக்கு விழா எடுத்து கொண்டாடுகையில் அதனை அறிந்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் சி . கோவிந்தராசனரைப் பார்த்து கண்ணகி சிலையை அரசிடம் வழங்க வேண்டுகோள் விடுக்கிறார். மேலும் உலகத் தமிழ் மாநாட்டிலும் கண்ணகி கோயில் பற்றிக் கலைஞர் வெளிப்படுத்துகிறார். தமிழகத்தின் தொன்மையான இலக்கியத்திற்கு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன இதன் மூலம் சிலப்பதிகாரம் ஒரு புராணக் கதையோ கற்பனை கதையோ அன்று. இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதனை உறுதிப்படுத்தியுள்ளதை உரக்க கூறினார்.
அமைவிடம்
தற்போது கோவில் அமைவிடமானது ,முல்லைப் பெரியாற்றின் நீர் பிடிப்பு பகுதியில் காப்புக்காடுகள் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள எல்லை பகுதியின் 600 சதுர கிலோமீட்டர் அளவில் பிரிக்கப்படாத நிலப்பரப்புக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல கேரளாவிடமிருந்து ஒரு வழியும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வழியுமாக அமைக்கப்பட்டு உள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்ணகி வழிபாடு காணப்பட்டு இருப்பினும்
இக்கோவில் பெருமளவில் நாளுக்கு நாள் சிதிலமடைந்து கொண்டே வருகிறது. தமிழர்களின் குருதியில் கலந்த காப்பியமான சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும் பற்றிய கவனிப்புக்கு பஞ்சம் நிலவுகிறது என்பதை அறிஞர் அண்ணா கூட ஒரு முறை தமிழ்நாட்டில் கண்ணகி ஏடு இருக்க ஏன் ?ராமாயண சீதையும் திரவுபதையும் அதிகம் பேசப்படுகின்றனர்? என்ற கேள்வி எல்லாம் நம் வரலாற்று குறிப்பில் இன்றும் காணப்படுகிறது. மேலும் உலகத்தமிழ் மாநாட்டில் கண்ணகிக்கும் இளங்கோவடிகளுக்கும் சிலை வைக்க குரல் கொடுத்த அண்ணா வாழ்ந்த தமிழ்நாட்டில், தமிழர்களின் உடைய தொல் இலக்கியத்தின் உடைய வரலாற்று நினைவு சின்னமாக இருக்கக்கூடிய கண்ணகி கோயில் கேரள தேசத்தின் தொல்லியல் துறையில் அகப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது , இது தமிழ்நாட்டிற்கு வேதனை படக்கூடிய ஒரு மிகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுஅண்டை மாநிலமான கேரளாவிடத்தில் உடனடியாக தலையிட்டு தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த சான்றுகளை காத்திடல் வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
அன்புடன்,
அனலி.




கருத்துகள்
கருத்துரையிடுக